செய்திகள்
ராஜினாமா செய்த போலீஸ்காரர் வேல்முருகன்.

ஜெயலலிதாவுக்காக கோவில் கட்டும் தேனி போலீஸ்காரர்

Published On 2016-12-09 04:42 GMT   |   Update On 2016-12-09 04:42 GMT
தேனியை சேர்ந்த போலீஸ்காரர் வேலையை ராஜினாமா செய்து விட்டு தான் கட்டும் கோவிலில் ஜெயலலிதா உருவ சிலையை வைத்து வழிபாடு நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.
தேனி:

தேனி மாவட்டம் குச்சனூரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது45) ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டபோது விடுதலை செய்ய வலியுறுத்தி டி.ஜி.பி. அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். போலீசார் தடுத்து காப்பாற்றினர்.

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் நலம் பெற வேண்டி தேனி விநாயகர் கோவிலில் போலீஸ் உடையில் மொட்டை போட் டார். வடபழனி முருகன் கோவிலில் அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தினார்.

மருத்துவ விடுப்பில் காசிக்கு சென்று ஜெயலலிதாவுக்காக வழிபாடு செய்தார். ஜெயலலிதா மரணம் அடைந்ததால் மிகுந்த வேதனையடைந்தார். இதனால் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்காக நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்திற்கு சென்று எஸ்.பியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் இறந்து விட்டதால் என்னால் பணியில் முழு கவனத்துடன் ஈடுபட முடியவில்லை. இதனால் எனது பணியில் இருந்து விலகி விட்டேன்.

தற்போது குச்சனூரில் காசிஅன்னபூரணி கோவில் கட்டி வருகிறேன். அந்த கோவிலில் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட உள்ளேன். அங்கு வரும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கவும் பொது சேவையில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளேன் என்றார்.

Similar News