செய்திகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Published On 2016-12-07 09:30 GMT   |   Update On 2016-12-07 09:30 GMT
தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது புயலாக மாற வாய்ப்புள்ளதால் தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:

வங்கக்கடலில் உருவான ‘நடா’ புயல் தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது. இந்தநிலையில் ‘நடா’ புயல் கடந்த 2-ந் தேதி வலுவிழந்து காரைக்கால் அருகே கரையை கடந்தது. அதன்பின்னரே பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்தநிலையில் தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

எனவே தூத்துக்குடி துறைமுகத்தில் இன்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி கடல் மிகவும் சீற்றமாக காணப்பட்டு ராட்சத அலைகள் எழலாம் என வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Similar News