செய்திகள்

கிருஷ்ணகிரியில் பழக்கடை உள்பட அடுத்தடுத்து 3 கடைகளில் தீ விபத்து

Published On 2016-12-04 12:02 GMT   |   Update On 2017-02-04 09:09 GMT
கிருஷ்ணகிரியில் இன்று காலை பழக்கடை உள்பட அடுத்தடுத்து 3 கடைகளில் தீ விபத்து ஏற்பட்டதில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி சென்ட்ரல் தியேட்டர் அருகே, பழைய பேட்டை பகுதியை சேர்ந்த லியாகத் அலி (வயது 35) என்பவர் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இன்று காலையில் இந்த பழக்கடை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை கண்டதும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்துக்கும், கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் கோவிந்தசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.

இருப்பினும் பழக்கடையில் பிடித்த தீ மளமளவென கொளுந்து விட்டு எரிந்து கொண்டு பக்கத்தில் லண்டன் பேட்டை பகுதியை சேர்ந்த பாலு(54) என்பவர் நடத்தி வரும் ஓட்டலில் தீ பரவியது. மேலும், அதன் அருகில் சாந்திநகரை சேர்ந்த திருப்பதியின் (60) டீக்கடையிலும் தீப்பிடித்தது.

ஆனாலும், தீயணைப்பு வீரர்கள் விடாமல் தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து 3 கடைகளிலும் பிடித்த தீயை சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் பழக்கடை முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. மேலும் ஓட்டலும், டீக்கடையும் தீயில் சேதமானது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேச மூர்த்தி, போக்குவரத்தை சரி செய்தார். பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தீ விபத்தில் சேத மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என தெரியவந்தது.

Similar News