செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலில் 20 ரூபாய் சிறப்பு தரிசன கட்டணம் ரத்து

Published On 2016-12-03 05:02 GMT   |   Update On 2016-12-03 05:02 GMT
மீனாட்சி அம்மன் கோவிலில் நடைமுறையில் இருந்த ரூ.20 சிறப்பு தரிசன கட்டணம் திடீ ரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். வெளி மாநிலம் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார் கள்.

இக்கோவிலுக்கு பக்தர் களின் வருகை அதிகரித்து வருவதால் கூட்டத்தை முறைப்படுத்த கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டண தரிசனத்தை கோவில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. ரூ.20, ரூ.50 மற்றும் ரூ.100 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென ரூ.20 சிறப்பு தரிசன கட்டணத்தை கோவில் நிர்வாகம் ரத்து செய்துள்ளதால் ஏழை பக்தர்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் பரிதவித்தனர். பின்னர் வேறுவழியின்றி 50, 100 ரூபாய் கட்டணத்தில் சென்று தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்த திடீர் நடவடிக்கை குறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறும்போது, கார்த்திகை மாதம் பிறந்ததில் இருந்து பக்தர்கள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. ரூ.20, ரூ.50 மற்றும் 100 சிறப்பு தரிசன கட்டண வரிசை ஒரே இடத்தில் இருப்பதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

எனவே சீசன் முடியும் வரை ரூ.20 கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் 3 மாதத்திற்கு பிறகு ரூ.20 கட்டணம் அமுல் படுத்தப்படும் என்றார்.

பக்தர் ஒருவர் கூறும் போது, தற்போது அதிக அளவில் அய்யப்ப பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கிறார்கள். எல்லோரும் பணக்கார பக்தர்கள் அல்ல. ஏழை, நடுத்தர பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.

எனவே கூட்டத்தை பயன்படுத்தி ரூ.20 சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்தார்கள். ஏன் 100 ரூபாய் கட்டணத்தை ரத்து செய்யக்கூடாது? எனவே ஏழைகள் பயன்பெறும் வகையில் ரூ.20 கட்டணத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றார்.

Similar News