செய்திகள்

டிசம்பர் 6-ந்தேதி போராட்டம் நடத்த தடை விதித்த தனிநீதிபதி உத்தரவு ரத்து

Published On 2016-11-26 03:15 GMT   |   Update On 2016-11-26 03:15 GMT
டிசம்பர் 6-ந்தேதி அன்று போராட்டம் நடத்த தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
மதுரை:

மதுரை மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர் ஷாகுல்அமீது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திண்டுக்கல்லில் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி போராட்டம் நடத்த அனுமதி கோரி இந்து அமைப்பு சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, வருங்காலத்தில் பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந்தேதி அன்று தமிழகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்கு எந்த அமைப்புகளுக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டது, அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிரானதாகும்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் தனி நீதிபதி கருத்து கேட்கவில்லை. இதனால் டிசம்பர் 6-ந்தேதி அன்று போராட்டங்கள் நடத்த தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஜெ.நிஷாபானு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

டிசம்பர் 6-ந்தேதி அன்று மத அமைப்புகள் போராட்டம் நடத்த தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் அமைப்பு சார்பில் டிசம்பர் 6-ந்தேதியில் போராட்டம் நடத்த அனுமதி கோரி அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை போலீசார் சட்டப்படி பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

போராட்டங்களுக்கு அனுமதி பெறும் அமைப்புகள் நாட்டின் நலன், மத நல்லிணக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அவ்வாறு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படாமல் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கூட்டங்களை நடத்த வேண்டும்.

இந்த நிபந்தனைகளை மீறுவோர் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அனுமதி பெற்ற பின்னர் நிபந்தனைகளை மீறுவோர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Similar News