செய்திகள்

மணவாளக்குறிச்சியில் மாமியாரின் சேலையை பிடித்து இழுத்த மருமகன் கைது

Published On 2016-10-27 12:00 GMT   |   Update On 2016-10-27 12:00 GMT
மனைவி விபத்தில் இறந்ததால் கொழுந்தியாளை 2-வது திருமணம் செய்து கொடுக்கச் சொல்லி மாமியாரின் சேலையை பிடித்து இழுத்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி சின்னவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பி. இவரது மகள்கள் ஷாஜி மெர்ஷினா, ஷாபி மேகலா (வயது 26).

மூத்த மகளான ஷாஜி மெர்ஷினாவை மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த டார்வின் (வயது 38) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஷாஜி மெர்ஷினா விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இந்தநிலையில் டார்வின் மாமனார் வீட்டுக்கு சென்று அவரது இளைய மகள் ஷாபி மேகலாவை தனக்கு 2-வது திருமணம் செய்து தரும்படி கேட்டார். அதற்கு அவர்கள் மறுத்ததால் அவர்களது வீட்டுக்கு அடிக்கடி சென்று தகராறில் ஈடுபட்டு வந்தார்.

ஷாபி மேகலா அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றுகிறார். அவர் கலலூரிக்கு செல்லும்போது அவரை வழிமறித்தும் டார்வின் தன்னை திருமணம் செய்யக்கோரி தகராறு செய்தார். மேலும் தகாத வார்த்தைகள் கூறி திட்டினார்.

இதனால் ஷாபி மேகலா தனது தாயாரிடம் கூறி அழுதார். ஷாபி மேகலாவின் தாயார் டார்வினை சந்தித்து அவரை கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த டார்வின் மாமியார் என்றும் பாராமல் அவரது சேலையை பிடித்து இழுத்து தகராறு செய்தார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டார்.

இதுபற்றி ஷாபி மேகலா மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணன், தேவசகாயம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து டார்வினை கைது செய்தனர்.

Similar News