செய்திகள்

திருப்பரங்குன்றம் தொகுதியில் மனுத்தாக்கல் தொடங்கியது

Published On 2016-10-26 05:13 GMT   |   Update On 2016-10-28 07:26 GMT
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது.

திருப்பரங்குன்றம்:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான மனுத்தாக்கல் இன்று (26-ந்தேதி) தொடங்கி வருகிற 2-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ், தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் மற்றும் பா.ம.க. வேட்பாளர் செல்வம் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் தே.மு.தி.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

இடைத்தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று (புதன்கிழமை) முதல் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது. தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட குடிமை பொருள் வழங்கல் அதிகாரி ஜீவா, உதவி அலுவலர்கள் முருகையன், சரவணப்பெருமாள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி உள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பிரதான கட்சிகளான அ.தி.மு.க, தி.மு.க. ஆகிய கட்சி வேட்பாளர்கள் 28-ந்தேதி மனுத் தாக்கல் செய்ய ஆலோசித்து வருகிறார்கள்.

வேட்பாளருடன் 5 பேர் மட்டும் சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. 3 வாகனங்களில் மட்டும் வர வேண்டும். வேட்புமனு காலை 11 மணிக்கு மேல் மதியம் 3 மணி வரை செய்யலாம்.

இதையொட்டி திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Similar News