செய்திகள்
கொலையுண்ட மாதேஷ் பிணமாக கிடக்கும் காட்சி.

சேலம் அருகே அ.தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் கொலை

Published On 2016-10-25 07:51 GMT   |   Update On 2016-10-25 07:51 GMT
சேலம் அருகே அ.தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகுடஞ்சாவடி:

சேலம் அருகே உள்ள மகுடஞ்சாவடி ஜெயபுரி வீதியை சேர்ந்தவர் சேட்டு என்ற மாதேஷ் (வயது38).

அ.தி.மு.க. பிரமுகரான இவர் மகுடஞ்சாவடி ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவராவார். தற்போது அரசு காண்டிராக்ட் பணிகள் செய்து வந்தார். இவருக்கு செந்தாமரை செல்வி என்ற மனைவியும், ஹரிகிருஷ்ணா, சுகாந்த் கிருஷ்ணா என்ற 2 மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில் சுகாந்த் கிருஷ்ணாவுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அவரை செந்தாமரை செல்வி அருகில் இருந்து கவனித்து வந்தார். இதனால் மகுடஞ்சாவடியில் உள்ள வீட்டில் நேற்றிரவு மாதேஷ் மட்டும் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை மகுடஞ்சாவடி, பாட்டப்பன் கோவில் அருகே உள்ள ஒரு ஓடையில் மாதேஸ்வரன் கால், கை முறிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மோட்டார் சைக்கிள் 50 அடி தூரத்தில் நின்றது.

இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் மற்றும் மனைவிக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அவரது உறவினர்கள்,மனைவி மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் மாதேசின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

தகவல் அறிந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாரண வீரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் அந்த பகுதிக்கு சென்ற மாதேசை மர்மநபர்கள் அடித்து கொடுரமாக கொலை செய்து உடலை அங்கு போட்டு விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவுவதால் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News