செய்திகள்

முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு மீது த.மா.கா. நிர்வாகி மோசடி புகார்

Published On 2016-10-25 05:32 GMT   |   Update On 2016-10-25 05:32 GMT
முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு அவரது மனைவி, மகன் மீது த.மா.கா. நிர்வாகி மோசடி புகார் அளித்துள்ளார். 3 பேர் மீதும் கோவை மாநகர குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை:

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் வி.வி.வாசன். கோவை மாவட்ட த.மா.கா. தலைவராக இருந்து வருகிறார்.

இவர் மூத்த வக்கீல் ஜெயச்சந்திரன் மூலம் கோவை ஜே.எம். (எண்-5) கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

சிங்காநல்லூரில் இயங்கி வந்த ‘கமலா டெக்ஸ்டைல் மில்’ 2006-ம் ஆண்டில் ஏலத்துக்கு வந்தது.

இந்த மில்லை, தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த தங்கபாலு, அவரது பெயருக்கு ஏலம் எடுக்க என்னை நியமனம் செய்தார். அதன்படி ரூ.20 கோடிக்கு மில்லை ஏலத்தில் எடுத்து கொடுத்தேன். அதன்பின் கமலா மில் என்பதை தாமரை மில்லாக பெயர் மாற்றப்பட்டது. மேலும் தாமரை மில்லுக்கு என்னை பொறுப்பாளராக நியமித்தார்.

அப்போது லாபத்தில் 10 கோடி ரூபாயும், 20 சென்ட் இடமும் தருவதாக என்னிடம் உறுதியளித்தார். கடந்த 10 ஆண்டுகளாக மில்லை திறம்பட நிர்வகித்து பல கோடி லாபம் ஈட்டி கொடுத்தேன்.

இந்த நிலையில் லாபத்தில் பங்கு கேட்ட போது அவர் தரமறுத்தார். மேலும் மில்லை வேறு பெயருக்கு மாற்றம் செய்து இயக்குனராக அவரது மனைவி ஜெயந்தி தங்கபாலு, மகன் கார்த்திக் ஆகியோரை நியமித்தார்.

மேலும் பணம் கேட்ட என்னை மிரட்டினார். லாபத்தில் பங்கு தருவதாக கூறி நம்பிக்கை மோசடி செய்த தங்கபாலு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு புகாரில் தெரிவிக்கப்பட்ட தங்க பாலு, அவரது மனைவி ஜெயந்தி, மகன் கார்த்திக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இதனால் 3 பேர் மீதும் கோவை மாநகர குற்றப் பிரிவு போலீசார் மோசடி , கூட்டுச்சதி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News