செய்திகள்

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா வந்த சென்னை பெண் வக்கீல்- கணவரை தாக்கிய காட்டெருமை

Published On 2016-10-24 12:43 GMT   |   Update On 2016-10-24 12:43 GMT
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா வந்த சென்னை பெண் வக்கீல் மற்றும் கணவர் ஆகியோர் காட்டெருமை தாக்கியதால் பலத்த காயமடைந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதேபோல் சுற்றுலாவாக சென்னை மல்லிவாக்கத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது29), அவரது மனைவி தாமரை (28) ஆகியோர் இன்று காலை குன்னூருக்கு வந்தனர். பின்னர் சிம்ஸ் பூங்காவை சுற்றி பார்த்து கொண்டிருந்தனர். செல்வராஜ் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தாமரை வக்கீல் ஆவார்.

சிம்ஸ் பூங்காவின் அழகை தம்பதியினர் ரசித்து பார்த்து கொண்டிருந்த போது அங்கு திடீரென ஒரு காட்டெருமை வந்தது. பின்னர் திடீரென ஆவேசத்துடன் காட்டெருமை தம்பதியை தாக்கியது. இதில் காட்டெருமை கொம்பால் தாக்கியதில் வக்கீல் தாமரை வயிற்றில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் மனைவியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் காட்டெருமை விரட்டி தாக்கியது.

இதில் கணவன்- மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களின் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News