செய்திகள்

மது அருந்தி புகை பிடித்த 5 மாணவர்கள் இடைநீக்கம்: கண்காணிக்க தனி குழு அமைக்க திருப்பூர் கல்வி அதிகாரி உத்தரவு

Published On 2016-10-20 11:39 GMT   |   Update On 2016-10-20 11:39 GMT
திருப்பூரில் பள்ளி மாணவர்கள் மது அருந்தி புகைபிடித்தது தொடர்பாக சஸ்பெண்டு செய்யப்பட்டதை அடுத்து மாணவர்களை கண்காணிக்க தனி குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் டவன்ஹால் அருகே நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிளஸ்-2 மாணவர்கள் 2 பேரும், பிளஸ்-1 மாணவர் ஒருவரும், 10-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேரும் என மொத்தம் 5 மாணவர்கள் வகுப்பறையில் மது அருந்தி புதை பிடித்ததாக சக மாணவர்கள் தலைமை ஆசிரியர் சுசீந்திரனிடம் புகார் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து 5 மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தினார். இதில் அவர்கள் தவறு செய்தது தெரிய வந்தது. இதனால் மாணவர்களிடம் தங்களது பெற்றோரை அழைத்து வந்து விளக்கம் அளிக்கும்படி கூறப்பட்டது.

பின்னர் இந்த சம்பவம் பற்றி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று அவர் விசாரணை நடத்த பள்ளிக்கு வந்தார். அப்போது 5 மாணவர்களில் 2 பேர் மட்டுமே வந்திருந்தனர். அவர்கள் தங்களது பெற்றோருடன் வரவில்லை.

பின்னர் அந்த 2 மாணவர்களிடம் விசாரணை நடத்திய போது, வகுப்பறையில் 3 மாணவர்கள் மது அருந்தியதும், 2 பேர் புகை பிடித்ததும் தெரிய வந்தது.

இதைதொடர்ந்து அந்த 5 மாணவர்களையும் 10 நாட்கள் இடைநீக்கம செய்து முதன்மை கல்வி அதிகாரி முருகன் உத்தரவிட்டார். 10 நாட்கள் கழித்து மீண்டும் பள்ளிக்கு வரும் போது கண்டிப்பாக பெற்றோருடன் வர வேண்டும் என்றும் மற்ற 3 மாணவர்களிடமும் இந்த தகவலை தெரிவிக்கும்படி தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் கூறியதாவது:-

பள்ளிக்கு சென்று நடத்திய விசாரணையில் 5 மாணவர்களும் மது அருந்தி புகை பிடித்தது தெரிய வந்தது. தற்போது அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மாணவர்கள் தவறான பழக்கங்களில் ஈடுபடுவதை தடுக்க பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் தனி குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News