செய்திகள்

கன்னியாகுமரியில் காந்தி அஸ்தி கட்டத்தில் விழுந்த அபூர்வ சூரிய ஒளி

Published On 2016-10-03 02:15 GMT   |   Update On 2016-10-03 02:15 GMT
கன்னியாகுமரியில் காந்தி அஸ்தி கட்டத்தில் விழுந்த அபூர்வ சூரிய ஒளியை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்தனர்.
கன்னியாகுமரி :

மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்ட பின்னர், அவரது அஸ்தி கடந்த 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந் தேதி கன்னியாகுமரியில் கரைக்கப்பட்டது. முன்னதாக அஸ்தி கலசம் கடற்கரையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அதனை நினைவு கூறும் வகையில் அஸ்தி கலசம் வைக்கப்பட்ட இடத்தில் காந்தி நினைவு மண்டபம் கட்டப்பட்டது. காந்தி தனது 79-வது வயதில் இறந்ததை நினைவுபடுத்தும் வகையில் அந்த மண்டபம் 79 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ந் தேதி இந்த நினைவு மண்டபத்தில் உள்ள காந்தியின் அஸ்தி கட்டத்தில் (நினைவு இடத்தில்) அபூர்வ சூரிய ஒளி விழுவது வழக்கம். அதுபோல், இந்த ஆண்டு காந்தி ஜெயந்தியான நேற்று மதியம் 12 மணி முதல் 12.10 மணி வரை அபூர்வ சூரிய ஒளி காந்தி அஸ்தி கட்டத்தின் மீது விழுந்தது. காந்தி மண்டப ஊழியர்கள் வெள்ளை துணியை விரித்து அபூர்வ சூரிய ஒளி விழுந்ததை சுற்றுலா பயணிகளுக்கு காட்டினர்.

அப்போது, தேச பக்தி பாடல்களும், காந்தி பற்றிய பிரார்த்தனை பாடல்களும் பாடப்பட்டன. அபூர்வ சூரிய ஒளி விழுந்த போது அங்கு திரண்டு இருந்த ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாபயணிகளும், வெளிமாவட்ட சுற்றுலா பயணிகளும் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

முன்னதாக காந்தி மண்டபத்தில் உள்ள அவரது அஸ்தி கட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Similar News