செய்திகள்

மதுரை மாநகராட்சி தேர்தலில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் சுயேட்சைகளாக களம் இறங்க திட்டம்

Published On 2016-09-29 06:31 GMT   |   Update On 2016-09-29 06:31 GMT
மதுரை மாநகராட்சி தேர்தலில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் சுயேட்சைகளாக களம் இறங்க திட்டமிட்டு உள்ளனர்.
மதுரை:

மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் தி.மு.க.வுக்கு 13 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் 25-வது வார்டு உறுப்பினர் ஜீவானந்தம் சமீபத்தில் அ.தி.மு.க.வில் இணைந்தார். மீதி உள்ள 12 தி.மு.க. உறுப்பினர்கள் எம்.எல்.ராஜ், நன்னா, குடைவீடு அருண்குமார், முபாரக் மந்திரி உள்பட பலர் மு.க. ஆழகிரியின் ஆதரவாளர்களாக உள்ளனர்.

வருகிற உள்ளாட்சி தேர்தலில் இவர்களுக்கு தி.மு.க. சார்பில் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் தி.மு.க. உறுப்பினர்களின் வார்டுகளில் 9 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வார்டுகளில் தற்போதுள்ள உறுப்பினர்கள் தங்களது தாய்-மனைவி மற்றும் உறவினர்களை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் இதுவரை வெளியிடாத நிலையில் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரான 67-வது வார்டு உறுப்பினர் முபாரக் மந்திரி, அதே வார்டில் சுயேட்சையாக போட்டியிடவும், இதேபோல் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மண்டல தலைவரான பி.எஸ்.அப்துல்காதரும் சுயேட்சையாக போட்டியிடவும் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.

தி.மு.க. வாய்ப்பு அளிக்காத நிலையில் சுயேட்சையாக போட்டியிட மேலும் சில தி.மு.க. உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் பலரும் சுயேட்சையாக களம் இறங்க முடிவு செய்துள்ளனர்.

சுயேட்சையாக போட்டியிடுவது குறித்து மு.க.அழகிரி ஆதரவாளர்களில் ஒருவர் கூறியதாவது:-

இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த கருத்தையும் மு.க.அழகிரி தெரிவிக்கவில்லை. சுயேட்சையாக போட்டியிடுவது அவரவர் இஷ்டம் என்றும், அதே நேரத்தில் எனது பெயரை தேர்தலில் பயன்படுத்த வேண்டாம் என்றும் கூறி உள்ளார் என்றார்.

மு.க.அழகிரி ஆதரவாளர்கள் பலர் சுயேட்சையாக போட்டியிட இருப்பதால் தி.மு.க. வேட்பாளர்களுக்கு இத்தேர்தலில் பின்னடைவு ஏற்படலாம் என கூறப்படுகிறது. இதனால் மதுரை தி.மு.க.வினர்களிடையே ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News