செய்திகள்

களக்காடு அருகே பிரண்ட மலையில் தீ: தீயை அணைக்க வனத்துறையினர் 2-வது நாளாக போராட்டம்

Published On 2016-09-27 05:14 GMT   |   Update On 2016-09-27 05:14 GMT
களக்காடு அருகே பிரண்ட மலையில் பற்றி எரியும் தீயை அணைக்க வனத்துறையினர் 2-வது நாளாக போராடி வருகின்றனர்.
களக்காடு:

களக்காடு அருகே உள்ள கள்ளிகுளம் பஞ்சாயத்தில் பிரண்ட மலை (பொத்தை) உள்ளது. இந்த மலை வருவாய் துறையினருக்கு உட்பட்டது ஆகும். தற்போது மழை பெய்யாமல் வறட்சி ஏற்பட்டுள்ளதால் மலைப்பகுதி காய்ந்து காணப்பட்டது.

இந்நிலையில் இந்த மலையின் அடிவாரத்தில் நேற்று மதியம் திடீர் என தீப்பற்றி எரிந்தது. காற்று வேகமாக வீசியதில் தீ மளமளவென பரவியது. மலையடிவாரத்தில் பற்றிய தீ இரவில் 200 அடி உயரம் வரை பரவி மலையின் உச்சியை நோக்கி பரவி வருகிறது. 100 ஏக்கர் பரப்பளவில் தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. இந்த தீயினால் அப்பகுதியில் புகை மூட்டம் எழுந்துள்ளது. மலையடிவாரத்தில் உள்ள மங்கம்மாள் சாலையை புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.

மலையடிவாரத்தில் உள்ள கல்லடி சிதம்பரபுரம், துவரைகுளம், கள்ளிகுளம், பொத்தைசுத்தி, சுப்பிரமணியபுரம் கிராமங்களில் தீயின் சாம்பல்கள் காற்றில் பறந்து வந்து விழுகின்றன. தீ பற்றி எரியும் சத்தம் மலையடிவார கிராமங்களிலும் எதிரொலிக்கிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த தீயினால் மலையில் உள்ள மரங்கள், செடி, கொடிகள், புதர்கள் கருகி வருகின்றன.

இங்குள்ள எறும்புதிண்ணி, முயல், கீறிபிள்ளை, உடும்பு போன்ற சிறிய வகையிலான விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

நெல்லை சமூக வனத்துறை ஊழியர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் தண்ணீர் வசதி இல்லாததால் மண், கற்களை அள்ளி போட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. 2-வது நாளாக தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

Similar News