செய்திகள்

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையில் துப்பு துலக்க கூடுதலாக 2 தனிப்படை அமைப்பு

Published On 2016-09-26 08:05 GMT   |   Update On 2016-09-26 08:05 GMT
இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையில் துப்பு துலக்க கூடுதலாக 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு தனிப்படை கேரளாவில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர்.
கோவை:

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கடந்த 22-ந் தேதி கொலை செய்யப்பட்டார்.

கொலையாளிகளை பிடிக்க டி.ஐ.ஜி. நாகராஜன் மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டுகள் ரம்யாபாரதி, உமா, சிவக்குமார் ஆகியோர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

கோவையில் இருந்து வீட்டுக்கு சசிகுமார் மொபட்டில் சென்ற பாதையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகள் மற்றும் அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளை பட்டியல் சேகரித்து விசாரணை நடந்து வருகிறது.

இதில் ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள ஒரு கேமராவில் சசிகுமார் மொபட்டை தள்ளி செல்லும் காட்சிகள் இருந்துள்ளது. அவர் மொபட்டை சிறிது தூரம் தள்ளி சென்று ஒரு பெட்டிக்கடையில் பொருள் வாங்கி உள்ளார். பின்னர் ஒரு மெக்கானிக் வந்து மொபட்டை பழுதுநீக்கிய பின்னர் சசிகுமார் அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்ற போது கொலையாளிகள் அவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். பின்னர் கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் அதே பாதையில் திரும்பி உள்ளனர்.

கொலையாளிகள் 2 பேர் வெள்ளை கலர் ஹெல்மெட் அணிந்து சென்றுள்ளனர். அவர்களின் மோட்டார் சைக்கிள் எண் மூலம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கேமரா பதிவுகளில் கொலையாளியின் உருவம் சரியாக தெரியவில்லை. என்றாலும் கொலையாளிகளின் உருவப்படத்தை வரைந்து அவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

கொலையாளிகளை யாராவது நேரில் பார்த்தார்களா? என பலரிடம் விசாரித்து வருகின்றனர். சசிகுமாருக்கு ஏற்கனவே மிரட்டல் விடுத்தவர்கள் யார் - யார்? அவரது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டவர்கள் யார்-யார்? என்றும் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே கோவையில் சமீபத்தில் நடந்த கொலை வழக்குக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சசிகுமார் கொலையில் கிடைத்த முக்கிய தகவல்களை வைத்து விசாரணை நடந்து வருகிறது. கொலை தொடர்பாக துப்பு துலக்க மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு தனிப்படை கேரளாவில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர். பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News