செய்திகள்
தசரா பொருள் விற்பனை கடையில் ரப்பர் பாம்புகளை கையில் பிடித்து பக்தர்களிடம் காட்டும் காட்சி

தூத்துக்குடி கடைகளில் குவிந்த தசரா வேடபொருட்கள் - பக்தர்களை கவரும் ரப்பர் பாம்புகள்

Published On 2016-09-26 07:36 GMT   |   Update On 2016-09-26 07:36 GMT
தூத்துக்குடி கடைகளில் தசரா பொருள் சிறப்பு விற்பனை கடைகள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெருமளவு திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரப்பரால் செய்யப்பட்ட நல்ல பாம்பு, சாரை பாம்புகளும் விற்பனைக்காக வைத்துள்ளனர்.
முள்ளக்காடு:

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக பிரபலமாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

தசரா விழாவில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வேடமணிந்து தனித்தும் குழுக்களாகவும் சேர்ந்து காணிக்கை வசூலித்து நேர்த்தி கடனை நிறைவேற்றுவார்கள்.

பக்தர்களின் தேவைக்கேற்ப மாவட்டம் முழுவதும் தசரா பொருட்கள் விற்பனைக்காக ஏராளமான கடைகள் திறப்பது வழக்கம் அதுபோல இந்த ஆண்டு தசரா பொருள் சிறப்பு விற்பனை கடைகள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெருமளவு திறக்கப்பட்டது.

தூத்துக்குடி ஸ்பிக்நகரில் சாமி முகமூடிகள், ஹனுமான், கரடி முகமூடி, அம்மன் கீரிடம், அம்மன் வேட நீண்ட தலைமுடி, டோப்பா முடி, 12 கைகள் பொம்மை, சுடலைமாடன், கருப்பசாமி, வேட உடைகள், அரிவாள், ஈட்டி, வாள், சூலாயுதம், தடாயுதம் மற்றும் அட்டை கத்திகள், மண்டை ஓடு மாலைகள், கிறுக்கன் ஆடை, குறவன்-குறத்தி ஆடைகள், சாட்டை, பிரம்பு, சாமி வேட ஆடைகள் ஆகியவைகள் பக்தர்களின் தேவைக்காக விற்பனைக்கு வைத்துள்ளனர்.

மேலும் இந்த ஆண்டு ரப்பரால் செய்யப்பட்ட நல்ல பாம்பு, சாரை பாம்புகளும் விற்பனைக்காக வைத்துள்ளனர். அவைகளை பார்ப்பதற்கு உயிருள்ள பாம்புகள் போலவே தத்ரூபமாக இருக்கிறது. ஆகையால் வேடமணியும் பக்தர்கள் பலர் அதனை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Similar News