செய்திகள்

இந்து இயக்கங்கள் யாருக்கும் எதிரான இயக்கம் அல்ல: கோவையில் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Published On 2016-09-26 05:54 GMT   |   Update On 2016-09-26 07:52 GMT
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று சசிகுமாரின் இல்லத்தில் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கவுண்டம்பாளையம்:

கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று சசிகுமாரின் வீட்டிற்கு வந்து அவரது மனைவி யமுனா, தந்தை சின்னசாமி, தாயார் ராதா மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவருடன் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் மற்றும் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

அதன்பின் படுகொலை செய்யப்பட்ட சசிக்குமார் இறந்த இடத்துக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சசிக்குமார் படுகொலைக்கு காவல் துறை உரிய பாதுகாப்பு அளிக்காததே காரணம். ஒரு வருடமாக சசிக்குமாருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது. இதுவே கொலைக்கு காரணமாகி விட்டது.

ஓசூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 1989 முதல் தற்போது வரை இந்து இயக்க பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் பயங்கரவாதம் தான். இதனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சசிக்குமார் கொலை சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.

இந்து இயக்கங்கள் யாருக்கும் எதிரான இயக்கம் அல்ல. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் ஆகிய அனைத்து மதங்களையும் கடந்து அப்பாற்பட்ட ஒன்றாகும். இந்து மக்களை ஒன்றிணைந்து உதவி கொண்டு வருகிறது.

இந்து இயக்க பிரமுகர்கள் மற்றும் பா.ஜனதா தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும்.

இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

Similar News