செய்திகள்

ரேசன்கார்டில் புகைப்படத்தை மாற்றி வங்கியில் கடன் பெற்று மோசடி: மூதாட்டி புகார்

Published On 2016-09-20 06:11 GMT   |   Update On 2016-09-20 06:11 GMT
குளச்சல் அருகே ரேசன்கார்டில் புகைப்படத்தை மாற்றி வங்கியில் கடன் பெற்று மோசடி செய்திருப்பதாக மூதாட்டி புகார் அளித்துள்ளார்.
நாகர்கோவில்:

குளச்சல் அருகே பாலப்பள்ளம் பத்தரை காலனியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 60). இவர் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரிடம் ஒரு கண்ணீர் புகார் அளித்தார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் கணவரை இழந்த நிலையில் தமிழக அரசின் உதவித்தொகை மாதம் ரூ.1000-ம் பெற்று வருகிறேன். இதன்மூலமே எனது வாழ்க்கையை ஓட்டி வருகிறேன்.

இந்த நிலையில் கடந்த மாதம் குளச்சலில் உள்ள ஒரு வங்கியில் இருந்து எனக்கு கடிதம் வந்தது. அதில் அந்த வங்கியில் நான் ரூ.3 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும் அதை வட்டியுடன் செலுத்தும்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நான் வங்கிக்கு சென்று கடன் எதுவும் பெறாத நிலையில் இப்படி தபால் வந்திருப்பது பற்றி கேட்டேன். அதற்கு அவர்கள் சில ஆவணங்களை காட்டினார்கள். அதில் எனது ரேசன்கார்டு நகலில் புகைப்படத்தை மாற்றி கடன் பெற்று மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

எங்கள் பகுதியை சேர்ந்த மேலும் சில பெண்களும் இதுபோல ஏமாற்றப்பட்டு உள்ளனர். எனவே தாங்கள் நடவடிக்கை எடுத்து எனக்கு உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி உள்ளார்.

தொடர்ந்து லட்சுமி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். வாங்காத கடனுக்கு பாங்கி மூலம் நோட்டீசு வந்ததால் பத்தரை காலனி பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News