செய்திகள்

திறந்த வெளி கழிப்பறையை ஒழிக்க 75 ஆயிரம் பேர் விழிப்புணர்வு பேரணி

Published On 2016-07-21 05:14 GMT   |   Update On 2016-07-21 05:15 GMT
திறந்தவெளி கழிப்பறையை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று குமரி மாவட்டத்தில் மனித சங்கிலி மற்றும் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளை வரை சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் நடந்த இந்த மனித சங்கிலியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வ தொண்டு அமைப்பினர், பெண்கள், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மட்டும் 18 ஆயிரத்து 350 பேர் பங்கேற்றனர். மனித சங்கிலியில் மொத்தம் 75 ஆயிரம் பேர் பங்கு பெற்றனர். மனித சங்கிலியில் அணிவகுத்து நின்றவர்கள் தங்கள் கைகளில் விழிப்புணர்வு பதாகைகளையும், டிஜிட்டல் பேனர்களையும் கையில் ஏந்தி நின்றனர்.

இந்த மனித சங்கிலி பேரணியை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தொடங்கி வைத்தார். முதன்மை கல்வி அதிகாரி ஜெயக்குமார், சமூக சீரமைப்பு மைய இயக்குனர் ராம்குமார், டி.எஸ்.பி. பாலமுருகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லீமா ஹெப்சி உள்பட பலர் பங்கேற்றனர். தொடக்க விழாவை முன்னிட்டு அங்கு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. மேலும் கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வரை மினி மாரத்தான் போட்டியும் நடத்தப்பட்டது. ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று மாரத்தான் போட்டியில் ஓடினர்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, குமரி மாவட்ட கிராமிய கலைஞர்கள் பொதுநலன் சங்கம் மற்றும் கோல்டன் சிட்டி ரோட்டரி சங்கம் ஆகியவை செய்திருந்தன.

Similar News