செய்திகள்
பியான்கா

அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் செரீனாவுடன் பலப்பரீட்சை நடத்தும் பியான்கா

Published On 2019-09-06 04:03 GMT   |   Update On 2019-09-06 04:03 GMT
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் முன்னணி வீராங்கனையான செரீனாவை எதிர்த்து கனடாவின் இளம் வீராங்கனை பியாங்கா விளையாட உள்ளார்.
நியூயார்க்:


கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் பியான்கா 7-6 (7-3), 7-5 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

19வது வயது நிரம்பிய பியான்கா, கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக தகுதி பெற்றுள்ளார். அத்துடன், கனடா இளம் வீராங்கனைகளில் 2009-க்கு பிறகு பைனலுக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பியான்கா பெற்றுள்ளார்.



முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், 5ம் தரநிலை வீராங்கனை எலினா சுவிட்டோலினாவை 6-3, 6-1 என்ற செட்கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் அமெரிக்க ஒபனில் 10வதுமுறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறார் செரீனா.

சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதில், செரீனா வில்லியம்ஸ், பியான்கா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் முனைப்புடன் செரீனா, ஆக்ரோஷத்துடன் விளையாடுவார். இந்த தொடரின் துவக்கம் முதலே அசத்தி வரும் பியான்காவும், செரீனாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து, முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல தீவிரம் காட்டுவார். எனவே, இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
Tags:    

Similar News