செய்திகள்
டாம் லாதம் வாட்லிங்

கொழும்பு டெஸ்ட்: 4-வது ஆட்ட முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 382- நாளை அற்புதம் நடக்குமா?

Published On 2019-08-25 13:21 GMT   |   Update On 2019-08-25 13:21 GMT
கொழும்பில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 382 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. அன்றில் இருந்து இன்றைய 4-வது நாள் ஆட்டம் வரை பெரும்பாலான பகுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

கொழும்பு மைதானத்தில் மழைநீரை வெளியேற்றும் வசதி சிறப்பாக உள்ளதால், மழை நின்றதும் உடனடியாக ஆட்டம் தொடங்கப்பட்டது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி 3-வது நாள் ஆட்டத்தின்போது 244 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் அடித்திருந்தது.

இன்று 4-வது ஆட்டம் நடைபெற்றது. தொடக்க வீரர் டாம் லாதம் 154 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் வாட்லிங் உடன் கிராண்ட்ஹோம் ஜோடி சேர்ந்தார். வாட்லிங் நிதானமாக விளையாட கிராண்ட்ஹோம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் நியூசிலாந்து இன்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் குவித்துள்ளது. வாட்லிங் 81 ரன்னுடனும், கிராண்ட்ஹோம் 75 பந்தில் 83 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.



தற்போது வரை நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 138 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளை கடைசி முழுவதும் விளையாட மழை அனுமதித்தால் மதிய உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அதிரடியாக விளையாடி 250 ரன்கள் முன்னிலைப் பெற்று முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்ய வாய்ப்புள்ளது.

இலங்கை அணிக்கு 250 ரன்கள் வெற்றி நிர்ணயிக்கப்பட்டு இரண்டு செசன்களில் 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினால் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வாய்ப்புள்ளது.

ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே இதற்கு சாத்தியம்.
Tags:    

Similar News