செய்திகள்
இந்திய ஏ அணி

இந்திய ‘ஏ’ அணிக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி வெற்றி

Published On 2019-07-21 11:35 GMT   |   Update On 2019-07-21 11:35 GMT
வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் அக்சார் பட்டேல் 81 ரன்கள் அடித்த போதிலும் இந்திய ‘ஏ’ அணி ஐந்து ரன்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
இந்திய ‘ஏ’ அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய ‘ஏ’ அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், 4-வது ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் குவித்தது. கேப்டன் அம்ப்ரிஸ் 46 ரன்களும், விக்கெட் கீப்பர் தாமஸ் 70 ரன்களும், ராஸ்டன் சேஸ் 84 ரன்களும், கார்ட்டர் 50 ரன்களும் சேர்த்தனர். கலீல் அகமது அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்களும், அவேஷ் கான் 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

பின்னர் 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய ‘ஏ’ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான கெய்க்வாட் 20 ரன்களிலும், அன்மோல்ப்ரீத் சிங் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விஹாரி 20 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

குருணால் பாண்டே 45 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 45 ரன்களும் சேர்த்தனர். சுழற்பந்து வீச்சாளர் அக்சார் பட்டேல் 63 பந்தில் 81 ரன்கள் எடுத்து கடைசி வரை போராடினார். ஆனால் இந்திய ஏ அணியால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய ஏ அணி ஐந்து ரன்களில் வெற்றியை பறிகொடுத்தது.
Tags:    

Similar News