செய்திகள்

28 பந்தில் அரைசதம் அடித்ததுடன் டி20-யில் அதிக ரன்: உலக சாதனைப் படைத்தார் ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா

Published On 2019-02-08 09:14 GMT   |   Update On 2019-02-08 09:14 GMT
ஆக்லாந்தில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் ரோகித் சர்மா 28 பந்தில் அரைசதம் அடித்ததுடன் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். #RohitSharma
ஆக்லாந்து:

நியூசிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது.

தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 28 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

ரோகித் சர்மா 35 ரன்னைத் தொட்டபோது சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்திருந்த நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்திலை (2272) பின்னுக்குத்தள்ளி முதல் இடம்பிடித்தார்.

இந்த போட்டிக்கு முன் ரோகித் சர்மா 2238 ரன்கள் எடுத்து 2-வது இடத்தில் இருந்தார். இந்த போட்டியில் 50 ரன்கள் அடித்ததன் மூலம் 2288 ரன்கள் சேர்த்துள்ளார். ஹிட்மேன் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டியில் 4 சதம், 15 அரைசதம் விளாசியுள்ளார். பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 2263 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
Tags:    

Similar News