செய்திகள்

0-0 என இரண்டு அணிகளும் டிக்ளேர், ஒரு ஓவர் மீதமுள்ள நிலையில் ‘த்ரில்’ முடிவு

Published On 2018-10-13 10:11 GMT   |   Update On 2018-10-13 10:30 GMT
இரண்டு அணிகளும் ரன்ஏதும் அடிக்காமல் இன்னிங்சை டிக்ளேர் செய்ய, அதன்பின் பரபரப்பான கட்டத்தில் ஒரு ஓவர் இருக்கும் நிலையில் போட்டியில் வெற்றி கிடைத்தது.
நியூசிலாந்து நாட்டில் நடைபெறும் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் தொடர் பிளங்கெட் ஷீல்டு. இந்த தொடரில் போட்டிகள் நான்கு நாட்கள் கொண்டதாகும்.

கடந்த 10-ந்தேதி சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் - கான்டர்பரி அணிகள் இடையிலான ஆட்டம் நெல்சனில் தொடங்கியது. கான்டர்பரி அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் 96 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்கள் குவித்தது. லுடிக் 80 ரன்னுடனும், மெக்கோன் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

11-ந்தேதி மற்றும் 12-ந்தேதி (இரண்டு மற்றும் 3-வது நாள்) ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டது. இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. லுடிக் சதம் அடிக்க சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி 102.3 ஓவரில் 7 விக்கெட் இழற்பிற்கு 352 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இன்றைய கடைசி நாள் 89 ஓவர்கள் மட்டுமே இருந்ததால் நாம் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்யாமல் டிக்ளேர் செய்தால் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யும் என்று கான்டர்பரி அணி நினைத்து, பேட்டிங் செய்யாமல் 0-0 என முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

இதை சற்றும் எதிர்பாராத சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி, தங்களுடைய 2-வது இன்னிங்சையும் 0-0 என டிக்ளேர் செய்தது.

இரண்டு அணிகளும் அடுத்தடுத்து டிக்ளேர் செய்ததால் கான்டர்பரி அணிக்கு 353 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 89 ஓவரில் 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கான்டர்பரி களம் இறங்கியது.



கான்டர்பரி அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென வீழ்ந்தது. ஒரு கட்டத்தில் 62.1 ஓவரில் 9 விக்கெட்டை இழந்தது. கடைசி விக்கெட்டுக்கு வில்லியம்ஸ் உடன் ஹசல்டின் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலை வீரர்கள் என்பதால் 27 ஓவர்கள் தாக்குப்பிடிக்க கடினம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இருவரும் நிலைத்து நின்றுவிட்டனர். இதனால் ஆட்டம் டிரா நோக்கி சென்றது. கடைசி இரண்டு ஓவர்கள் இருந்தது. 25 ஓவர்களை தாக்குப்பிடித்தவர்கள் இன்னும் இரண்டு ஓவர்களை தாக்குப்பிடித்து விடுவார்கள் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 88-வது ஓவரின் கடைசி பந்தில் ஹசல்டின் ஆட்டமிழந்தார். இதனால் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி ஒரு ஓவர் மீதமுள்ள நிலையில் கஷ்டப்பட்டு வெற்றி பெற்றது.
Tags:    

Similar News