செய்திகள்

டோனியின் ஆட்டம் நான் 174 பந்தில் 36 ரன் எடுத்ததை ஞாபகப்படுத்தியது- சுனில் கவாஸ்கர்

Published On 2018-07-17 13:28 GMT   |   Update On 2018-07-17 13:28 GMT
2-வது ஒருநாள் போட்டியில் டோனியின் மந்தமான ஆட்டம் என்னுடைய பழைய ஆட்டத்தை ஞாபகப்படுத்தியதாக கவாஸ்கர் கூறியுள்ளார். #MSDhoni #Gavaskar
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த சனிக்கிழமை (ஜூலை 14-ந்தேதி) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 322 ரன்கள் குவித்தது. பின்னர் 323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. விராட் கோலி ஆட்டமிழக்கும்போது இந்தியா 27 ஓவரில் 140 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் ரெய்னா 46 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 21 ரன்னிலும் வெளியேறினார்கள்.

இதனால் டோனி அதிரடியாக விளையாட முடியவில்லை. அவர் 59 பந்துகள் சந்தித்து 37 ரன்கள் எடுத்தார். டோனி மெதுவாக விளையாடியதாக விமர்சனம் எழும்பியது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனும் ஆன சுனில் கவாஸ்கர், டோனியின் ஆட்டம் நான் 174 பந்தில் 36 ரன்கள் எடுத்ததை ஞாபகப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.



1975-ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்தை எதிர்த்து விளையாடியது. அப்போது 60 ஓவர் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 333 ரன்கள் குவித்தது. பின்னர் 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. கவாஸ்கர் 174 பந்துகள் சந்தித்து 36 ரன்கள் மட்டுமே எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நான் மந்தமாக விளையாடிய அந்த ஆட்டம், லண்டனில் டோனி ஆடியது எனக்கு ஞாபகப்படுத்தியது என்றார்.
Tags:    

Similar News