செய்திகள்

முதல் டி20 - ஸ்காட்லாந்து அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்

Published On 2018-06-12 19:11 GMT   |   Update On 2018-06-12 19:11 GMT
ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. #SCOvPAK #PAKvSCO

எடின்பர்க்:

ஸ்காட்லாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி எடின்பர்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் ஜமான், அகமது ஷெசாத் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஷெசாத் 14 ரன்களிலும், ஜமான் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஹுசைன் தலாட் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து கேப்டன் சர்பராஸ் அகமது, ஷோயிப் மாலிக் ஆகியோர் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 



இருவரும் அரைசதம் கடந்தனர். அதிரடியாக விளையாடிய மாலிக் 27 பந்தில் 5 சிக்ஸர்கள் உட்பட 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது. சர்பராஸ் அகமது இறுதிவரை ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சில் அலஸ்டெய்ர் எவான்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜார்ஜ் முன்சே, கைல் கொயிட்செர் ஆகியோர் களமிறங்கினர். முன்சே 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ரிச்சி பெர்ரிங்டன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். கைல் கொயிட்செர் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



இதுதவிர டைலான் பட்ஜ் 4 ரன்கள், கலம் மெக்லியோட் 12 ரன்கள், மேத்தீவ் கிராஸ் 13 ரன்கள் எடுத்தனர். மைக்கெல் லீஸ்க் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 38 ரன்கள் எடுத்தார். ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் ஹசன் அலி, ஷதப் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் அணியின் சர்பிராஸ் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஸ்காட்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. #SCOvPAK #PAKvSCO
Tags:    

Similar News