செய்திகள்

விரைவில் தாயாகிறார் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா

Published On 2018-04-23 23:25 GMT   |   Update On 2018-04-23 23:25 GMT
இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா விரைவில் தாயாகவுள்ளதாக டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். #SaniaMirza #ShoaibMalik #BabyMirzaMalik

புதுடெல்லி: 

சானியா மிர்சா, இந்திய டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் 2003ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை மகளிர் டென்னிஸ் சங்கத்தால் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை என தரவரிசைப்படுத்தப்பட்டார். 

இவருக்கு இந்திய அரசு பல்வேறு விருதுகளை அளித்து சிறப்பித்துள்ளது. 2004ம் ஆண்டு அர்ஜுனா விருது, 2006ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது, 2015ம் ஆண்டு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, 2016ம் ஆண்டு பத்ம பூஷண் விருது ஆகியவற்றை சானியா மிர்சா வென்றுள்ளார்.

2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பேமிலி கோப்பை டென்னிஸ் போட்டியில் மார்ட்டினா கிஞ்சிசுடன் இணைந்து இரட்டையர் பட்டத்தை வென்றதை அடுத்து இவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்தார். டென்னிஸ் போட்டி தரவரிசையில் முதல் இடம் பிடிக்கும் முதல் இந்தியப் பெண் இவராவார்.

இவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் (2016), விம்பிள்டன் (2015), யூ.எஸ். ஓபன் (2015) சாம்பியன் பட்டமும், கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் (2009), பிரஞ்சு ஓபன் (2012), யூ.எஸ். ஓபன் (2014) சாம்பியன் பட்டங்களையும் வென்று அசத்தியுள்ளார். 

சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த இவர், கடந்த 2010ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் வீரரை திருமணம் செய்து கொண்ட போதிலும், சானியா தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடி வருகிறார்.



இந்நிலையில், இவர் விரைவில் தாயாகவுள்ளதாக டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சானியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘பேபி மிர்சா-மாலிக்’ என குறிப்பிட்டு ஒரு படத்தின் மூலம் தாயாகவுள்ள விஷயத்தை தெரிவித்துள்ளார். இவரது கணவர் மாலிக்கும் இதே படத்தை பகிர்ந்துள்ளார். இந்த தகவலை சானியா மிர்சாவின் தந்தையும் உறுதி செய்துள்ளார். #SaniaMirza #ShoaibMalik #BabyMirzaMalik
Tags:    

Similar News