செய்திகள்

இண்டர் ஸ்டேட் டி20 கிரிக்கெட்: 49 பந்தில் சதம் விளாசிய ரெய்னா

Published On 2018-01-22 14:01 GMT   |   Update On 2018-01-22 14:01 GMT
பெங்கால் அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் உ.பி. அணிக்காக விளையாடும் சுரேஷ் ரெய்னா 49 பந்தில் சதம் அடித்து அசத்தினார். #SureshRaina
ரஞ்சி டிராபியில் விளையாடும் அணிகளுக்கு இடையில் சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று நடைபெற்ற போட்டியில் உத்தர பிரதேசம் - பெங்கால் அணிகள் மோதின.

உத்தர பிரதேசம் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி உத்தர பிரதேச அணியின் சமர்த் சிங், சவுத்ரி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் 3-வது பந்தில் சமர்த் சிங் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சவுத்ரி 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ரெய்னாவுடன் விக்கெட் கீப்பர் நாத் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பெங்கால் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. குறிப்பாக ரெய்னா வாணவேடிக்கை நிகழ்த்தினார். அவர் 49 பந்தில் சதம் அடித்தார். நாத் 43 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 80 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.



சதம் அடித்த ரெய்னா தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த உத்தர பிரதேசம் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது. ரெய்னா 59 பந்தில் 13 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 126 ரன்கள் குவித்தும், சர்பராஸ் கான் 3 பந்தில் 10 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

பின்னர் 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்கால் அணி 16.1 ஓவரில் 160 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் உத்தர பிரதேசம் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் கோஸ்வாமி அதிகபட்சமாக 57 ரன்கள் சேர்த்தார்.
Tags:    

Similar News