செய்திகள்

அர்ஜென்டினா அணிக்கு ஹிகுவைன் முக்கியமானவர்: மெஸ்சி

Published On 2017-12-07 10:23 GMT   |   Update On 2017-12-07 10:23 GMT
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் யுவான்டஸ் அணிக்காக விளையாடும் ஹிகுவைன் அர்ஜென்டினாவிற்கு முக்கியமானர் என்று மெஸ்சி கூறியுள்ளார்.
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. கடந்த முறை பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா ஜெர்மனி அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்த முறை எப்படியாவது சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என திட்டமிட்டுள்ளது. உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் கடுமையான போராட்டத்திற்குப் பின்பே வெற்றி பெற்று தகுதிப் பெற்றது.



அர்ஜென்டினா அணியின் முன்னணி ஸ்ட்ரைக்கராக விளங்கியவர் ஹிகுவைன். இவர் தற்போது யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 29 வயதான இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ஆனால் அர்ஜென்டினா பயிற்சியாளர் ஜார்ஜ் சம்பவுலி, ஹிகுவைனுக்கு தகுதிச்சுற்றில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு கொடுத்தார். அதன்பின் 7 போட்டிகளிலும் அவர் களம் இறக்கப்படவில்லை.

இந்நிலையில் அர்ஜென்டினா அணிக்கு அவர் மிகவும் முக்கியமானவர் என மெஸ்சி குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மெஸ்சி கூறுகையில் ‘‘அர்ஜென்டினா அணியில் ஹிகுவைன் இருக்க வேண்டும். ஏனென்றால், அவர் முக்கியமான வீரர். உலகின் தலைசிறந்த ஸ்ட்ரைக்கரில் அவரும் ஒருவர். யுவான்டஸ் அணிக்காக விளையாடும் அவர் ஒவ்வொரு வாரமும் இதை வெளிப்படுத்தி வருகிறார்’’ என்றார்.



ரஷியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கான ‘டி’ பிரிவில் அர்ஜென்டினா இடம்பிடித்துள்ளது. அர்ஜென்டினாவுடன் நைஜீரியா, குரோஷியா மற்றும் ஐஸ்லாந்து அணிகள் இடம்பிடித்துள்ளன. அர்ஜென்டினா 1978 மற்றும் 1986-ம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது.
Tags:    

Similar News