செய்திகள்

U-19 கூச் பெகார் டிராபி: 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்

Published On 2017-11-23 05:42 GMT   |   Update On 2017-11-23 05:42 GMT
சச்சின் டெண்டுகரின் மகன் அர்ஜூன் U-19 கூச் பெகார் டிராபியின் மத்திய பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
புதுடெல்லி:

U-19 கூச் பெகார் டிராபிக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது. மும்பை மற்றும் மத்திய பிரதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அர்ஜூன் டெண்டுல்கர் 5 விக்கெட்கள் எடுத்தார். பேட்ஸ்மேன் சச்சினின் மகனான இவர் தந்தையை போல் இல்லாமல் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக உருவாகி வருகிறார்.


முதல் இன்னிங்சில் மத்திய பிரதேசம் 361 ரன்கள் எடுத்தது. மும்பை 506 ரன்கள் குவித்தன. இரண்டாவது இன்னிங்சில் மத்திய பிரதேசம் 411 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதில் அர்ஜூனின் விளையாட்டு மிகவும் சிறப்பாக அமைந்தது.

அர்ஜுன் இதற்கு முன் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்ட போது பந்து வீசியது குறிப்பிடத்தக்கது. அதே போல் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரின் பயிற்சியின் போது இங்கிலாந்து அணிக்கு பந்து வீசினார்.

சச்சின் ஒரு பேட்டியில் பேசும் போது தனது மகன் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

என் மகனாக அர்ஜூன் மீது அதிகமான சுமை உள்ளது. இது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. என் தந்தை ஒரு எழுத்தாளர். அதனால் என் விளையாட்டு குறித்து யாரும் விமர்சனம் செய்யவில்லை. ஆனால் என் மகனை என்னுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். அவ்வாறு செய்ய கூடாது.



அவனுக்கென்று தனித்திறமை உள்ளது. அவனுடைய வாழ்க்கையில் நான் தேவையில்லாமல் தலையிட மாட்டேன். அவனுக்கு தேவைப்படும் போது மட்டுமே கிரிக்கெட் குறித்து அறிவுரை கூறுவேன். அர்ஜூன் கிரிக்கெட்டை நேசிக்கிறான். அதனால் கடுமையாக உழைக்க வேண்டும் என்று மற்ற எல்லா தந்தைகளும் அறிவுரை செய்வது போல் கூறினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News