செய்திகள்

6 மிமீ உயர புற்களுடன் பச்சைபசேல் எனக் காணப்படும் ஈடன் கார்டன் ஆடுகளம்

Published On 2017-11-14 10:41 GMT   |   Update On 2017-11-14 10:41 GMT
கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளம் 6 மிமீ உயிர புற்களுடன் பச்சைபசேல் எனக் காணப்படுகிறது. இதனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் (16-ந்தேதி) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்தியாவில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கிரிக்கெட் மைதானத்தில் ஈடன் கார்டனும் ஒன்று. இந்த மைதானத்தில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம்.



பொதுவாக கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும். ஆனால், இரண்டு சீசனுக்கு முன் பெர்முடாவில் இருந்து கொண்டு வந்த மண் மூலம் ஆடுகளம் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

அதில் இருந்து ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது. புற்கள் காயாமல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உயிருடன் இருப்பதால் மூன்று நாட்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொண்டாட்டம்தான். கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக கொல்கத்தாவில் விளையாடிய டெஸ்ட் போட்டியில் புவனேஸ்வர் குமார், மொகமது ஷமி ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள்.

தற்போது இந்தியா - இலங்கை போட்டிக்கான ஆடுகளம் தயாராக உள்ளது. நேற்று இலங்கை அணி கேப்டன் சண்டிமல், தனது அணி நிர்வாகிகளுடன் ஆடுகளத்தை பார்வையிட்டார். இன்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரகானே ஆகியோர் ஆடுகளத்தை பார்வையிட்டனர்.



ஆடுகளத்தை பார்க்கும்போது பச்சைபசேல் என்று காட்சியளிக்கிறது. சுமார் 6 மிமீ உயர அளிவில் புற்கள் நிறைந்து காணப்படுகிறது. இருந்தாலும் போட்டி நடைபெறுவதற்கு முன் 3மிமீ வரை புற்களை வெட்ட வாய்ப்புள்ளது.

3 மிமீ உயர புற்கள் இருந்தால் பந்து ஸ்வீங், கேரி மற்றும் பவுன்ஸ் ஆகியவை அதிக அளவில் இருக்கும். இதனால் இந்தியா மூன்று முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News