செய்திகள்

யு.எஸ். ஓபன் டென்னிஸ்: 18 மாத தடைக்கு பின் கிராண்ட்ஸ்லாமில் பங்கேற்கிறார் மரியா ஷரபோவா

Published On 2017-08-16 22:05 GMT   |   Update On 2017-08-16 22:05 GMT
யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் 18 மாத தடைக்கு பின் மரியா ஷரபோவா பங்கேற்க உள்ளார்.


வாஷிங்டன்: 

யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் 18 மாத தடைக்கு பின் மரியா ஷரபோவா பங்கேற்க உள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், யு.எஸ் ஓபன் என ஆண்டுதோறும் 4 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்கள் நடத்தப்படுகின்றன. ஆண்டின் 4வது மற்றும் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யு.எஸ். ஓபன் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. இதன் பிரதான சுற்றில் விளையாட, முன்னாள் உலக நம்பர்-1 வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு, வைல்டு கார்டு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ரஷ்யாவை சேர்ந்தவரான 30 வயதாகும் மரியா ஷரபோவா, கடந்த 18 மாதங்களுக்கு பின்னர் விளையாட இருக்கும் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர் இதுவாகும். கடைசியாக 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் அவர் விளையாடியிருந்தார். 

அதன்பின் மெலடோனியம் என்ற ஊக்க மருந்தை உட்கொண்டதால், மரியா ஷரபோவாவுக்கு 15 மாத தடை விதிக்கப்பட்டது. இந்த தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவுக்கு வந்தது. அதன்பின் டபிள்யூ.டி.ஏ(WTA) டூரில் சில தொடர்களில் விளையாட அவருக்கு வைல்டு கார்டு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் கடந்த மே, ஜூன் மாதங்களில் நடந்த பிரெஞ்சு ஓபனில் அவருக்கு வைல்டு கார்டு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த ஜுலை மாதம் நடந்த விம்பிள்டனில், காயம் காரணமாக அவர் பங்கேற்கவில்லை.

வைல்டு கார்டு வாய்ப்பு கிடைத்துள்ளபோதும், கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, யு.எஸ் ஓபனில் அவர் பங்கேற்பது சந்தேகமாகி உள்ளது. இதனால் யு.எஸ் ஓபனில் பங்கேற்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சமீபத்தில் முடிவடைந்த ரோஜர்ஸ் கோப்பை, தற்போது நடந்து வரும் சின்சினாட்டி ஓபன் ஆகியவற்றில் இருந்து மரியா ஷரபோவா விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News