செய்திகள்

ஒரே ஓவரில் 26 ரன்கள், 8 வீரராக களமிறங்கி அதிரடி சதம்: ஹர்திக் பாண்டியா சாதனை

Published On 2017-08-13 10:28 GMT   |   Update On 2017-08-13 10:28 GMT
ஒரே ஓவரில் 26 ரன்கள் குவித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா பெற்றுள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் பல்லேகலேயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்தியா, தவான் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் சேர்த்திருந்து.

சகா 13 ரன்னுடனும், ஹர்திக் பாண்டியா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் சகா மேலும் 3 ரன்கள் எடுத்த நிலையில் பெர்னாண்டோ பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து ஹர்திக் பாண்டியா உடன் குல்தீப் யாதவ் ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து குல்தீப் யாதவ் சிறப்பாக விளையாடினார். ஆனால் 26 ரன்கள் எடுத்த நிலையில் சண்டகன் பந்தில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது. அப்போது இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் எடுத்திருந்தது.



குல்தீப் யாதவ் அவுட்டாகும் வரை ஹர்திக் பாண்டியா நிதானமாக விளையாடினார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 61 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் கடந்த ஹர்திக் பாண்டியா, அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். இதற்கிடையே மறுமுனையில் மொகமது ஷமி 8 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

உமேஷ் யாதவை துணைக்கு வைத்துக் கொண்டு பந்தை பவுண்டரிக்கும் சிக்சருக்குமாக பறக்க விட்டார் ஹர்திக் பாண்டியா. இதனால் 86 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் அடித்தார். 3-வது டெஸ்டில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 8-வது வீரராக களம் இறங்கி அதிரடியாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.



மேலும், மலிந்தா புஷ்பகுமாரா வீசிய ஒரே ஓவரில் இரண்டு பவுண்டரி, 3 சிக்சர்கள் விளாசினார். இந்த ஓவரில் 26 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 26 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து விளையாடிய ஹர்திக் பாண்டியா 96 பந்தில் 108 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். உமேஷ் யாதவ் உடன் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா 66 ரன்கள் சேர்த்தார். உமேஷ் யாதவ் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Tags:    

Similar News