செய்திகள்

பெண்கள் அணியின் விக்கெட் கீப்பருக்கு டி.எஸ்.பி. பதவி: இமாச்சல பிரதேச அரசு அறிவிப்பு

Published On 2017-07-25 12:27 GMT   |   Update On 2017-07-25 12:27 GMT
பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய விக்கெட் கீப்பர் சுஷ்மா வர்மாவிற்கு டி.எஸ்.பி. பதவி வழங்க இமாச்சல பிரதேச அரசு முன்வந்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற பெண்கள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 2005-ம் ஆண்டிற்குப் பிறகு சுமார் 12 ஆண்டுகள் கழித்து தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் போட்டியை நடத்திய இங்கிலாந்தை எதிர்கொண்டது.

இதில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 228 ரன்கள் சேர்த்தது. பின்னர் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் 219 ரன்கள் எடுத்து துரதிருஷ்டவசமாக 9 ரன்னில் தோல்வியடைந்து கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது.

கோப்பையை கைப்பற்றவில்லை என்றாலும் இந்திய பெண்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இந்திய பெண்கள் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதுடன், பரிசு மழைகளும் குவிந்து வருகிறது.



இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டவர் சுஷ்மா வர்மா. இவர் இமாச்சல பிரதேசம் மாநிலத்தின் ஷிம்லாவில் உள்ள ஹிம்ரி பஞ்சாயத்தைச் சேர்ந்தவர். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது. இதில் சுஷ்மா சர்மா 35 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 33 ரன்கள் சேர்த்தார். இதுதான் 2-வது அதிகபட்ச ஸ்கோராகும்.

பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 74 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதற்காக சுஷ்மா வர்மாவிற்கு டி.எஸ்.பி. பதவி கொடுக்க இமாச்சல பிரதேச மாநில அரசு முன்வந்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில முதல்வர் வீரபத்ர சிங் கூறுகையில் ‘‘சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சுஷ்மாவின் சாதனை பெருமை கொள்ள வைக்கிறது. அவரது பெருமையை பாராட்டும் வகையில் டி.எஸ்.பி. பதவி கொடுக்க அரசு முன்வந்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News