செய்திகள்

வங்காள தேசத்திற்கு எதிராக 342 ரன்களை விரட்டி பாகிஸ்தான் அபார வெற்றி

Published On 2017-05-28 09:08 GMT   |   Update On 2017-05-28 09:08 GMT
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசத்திற்கு எதிராக 342 ரன்களை விரட்டி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் நேற்று பாகிஸ்தான் - வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்கள் குவித்தது.

பின்னர் 342 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக அசார் அலி, அஹமது ஷேசாத் ஆகியோர் களம் இறங்கினார்கள். அசார் அலி 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த நட்சத்திர வீரர் பாபர் ஆசம் 1 ரன்னில் வெளியேறினார். அஹமது ஷேசாத் 44 ரன்களிலும், மொகமது ஹபீஸ் 49 ரன்களும், சோயிப் மாலிக் 72 ரன்களும், இமாத் வாசிம் 45 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு நம்பிக்கை ஊட்டினார்கள்.

ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் வெற்றிக்கு 10 ஓவரில் 109 ரன்கள் தேவைப்பட்டது, 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹசன் அலி, ஃபஹிம் அஷ்ரப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர்.


72 ரன்கள் சேர்த்த சோயிப் மாலிக்

கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. ஃபஹிம் அஷ்ரப் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் 3 ரன்கள் அடித்தார். 3-வது பந்தை ஹசன் அலி பவுண்டரிக்கு விரட்ட பாகிஸ்தான் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹசன் அலி 15 பந்தில் 27 ரன்னுடனும், ஃபஹிம் அஷ்ரப் 30 பந்தில் 64 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
Tags:    

Similar News