செய்திகள்

சவுதி அரேபியாவிற்கு எதிராக 28 ரன்னில் சுருண்ட சீனா: 50 ஓவர் கிரிக்கெட்டில் மோசமான சாதனை

Published On 2017-04-23 10:52 GMT   |   Update On 2017-04-23 10:52 GMT
உலக லீக் குவாலிபையர் தொடரில் சவுதி அரேபியாவிற்கு எதிரான 50 ஓவர் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சீனா 28 ரன்னில் சுருண்டு மோசமான சாதனை படைத்துள்ளது.
2023-ம் ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான உலக கிரிக்கெட் லீக் ரீஜினல் குவாலிபையர் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் தாய்லாந்து, பஹ்ரைன், பூடான், குவைத், கத்தார், சீனா மற்றும் சவுதி அரேபியா அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

நேற்று நடைபெற்ற போட்டியில் சவுதி அரேபியா - சீனா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சவுதி அரேபியா 418 ரன்கள் குவித்தது. சவுதி அரேபியா அணியின் மொகமது அஃப்சல் 91 பந்தில் 13 பவுண்டரி, இரண்டு சிக்சருடன் சதம் அடித்தார். ஷபாஸ் ரஷீத் 50 ரன்னும், கேப்டன் சோயிப் அலி 41 பந்தில் 10 பவுண்டரி, 6 சிக்சருடன் 91 ரன்கள் குவித்தார்.

பின்னர் 419 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் சீனா அணி களம் இறங்கியது. அந்த அணி 12.4 ஓவரில் 28 ரன்கள் எடுப்பதற்குள் ஆல்அவுட் ஆகி சரணடைந்தது. இதில் உதிரியாக மட்டுமே சீன அணிக்கு 13 ரன்கள் கிடைத்தது. இதுதான் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோராகும்.

இதற்கு முன் 2004-ல் இலங்கை அணிக்கெதிராக ஜிம்பாப்வே 35 ரன்னில் சுருண்டதுதான் குறைந்தபட்ச ஸ்கோராகும். உள்ளூர் தொடர்களில் பார்படோஸ் அணிக்கெதிராக 2007-ல் வெஸ்ட் இண்டீஸ் இளையோர் அணி 18 ரன்னில் சுருண்டுள்ளது.

Similar News