செய்திகள்

போட்டிகளை நடத்த நிதி அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2017-03-25 04:14 GMT   |   Update On 2017-03-25 04:14 GMT
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த சம்பந்தப்பட்ட மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு உரிய நிதியை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உடனடியாக வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி :

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உரிய நிதியை வழங்கவில்லை என்று இமாச்சலபிரதேசம் உள்பட சில மாநில கிரிக்கெட் சங்கங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தன. இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சந்திரசூட், கான்வில்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை நடத்திய நீதிபதிகள், ‘ஒப்பந்த விதிமுறைகளை மதித்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த சம்பந்தப்பட்ட மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு உரிய நிதியை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் ஏப்ரல் 5-ந் தேதி தொடங்க இருக்கும் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த விதிமுறைகளின் படி இந்திய கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல். அணி நிர்வாகம், மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஆகியவை நடந்து கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Similar News