செய்திகள்

ஐ.பி.எல். போட்டிக்கு தேர்வான ஓசூர் பெயிண்டர் மகன்

Published On 2017-03-03 03:19 GMT   |   Update On 2017-03-03 03:19 GMT
ஓசூரை சேர்ந்த பெயிண்டரின் மகன் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 10 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது.
ஓசூர் :

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்தவர் ராம்சிங்யாதவ். இவர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் பிழைப்பிற்காக ஓசூர் பகுதிக்கு வந்தார். ராம்சிங்யாதவ் ஓசூரில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாயாதேவி. இவர்கள் ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இவர்களது மூத்த மகன் சஞ்சய்யாதவ்(வயது 21). இவர் சென்னை லயோலா கல்லூரியில் பி.எஸ்சி. புள்ளியியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் சோனுயாதவ்(17). ஓசூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர்கள் இரண்டு பேரும் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவர்கள். இருவரும் ஓசூரில் உள்ள ஒரு கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வந்தனர்.



சஞ்சய்யாதவ் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் உள்ளார். கடந்த ஆண்டு நடந்த தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் திருவள்ளூர் வீரன்ஸ் அணிக்காக பங்கேற்றார். இதில், திருவள்ளூர் வீரன்ஸ் அணியில் இடம் பெற்று திண்டுக்கல் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தமிழ்நாடு 20-20 அணிக்காக விளையாடியபோது கேரள அணிக்கு எதிராக, முக்கியமான கட்டத்தில் பேட்டிங்கில் அசத்தி வெற்றிக்கு உதவினார்.

இதன் மூலம் சஞ்சய் யாதவுக்கு ஐ.பி.எல். வாய்ப்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் பெங்களூருவில் நடந்த ஐ.பி.எல். ஏலத்தில் இறுதி கட்டமாக 351 வீரர்கள் பங்கேற்றனர். இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 10 லட்சம் ரூபாய்க்கு சஞ்சய் யாதவ் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து முதல் நபராக ஐ.பி.எல். போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட சஞ்சய் யாதவை அவரது பயிற்சியாளர் பிரேம்நாத், சோமு மற்றும் பெற்றோர், நண்பர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

Similar News