செய்திகள்

20 ஓவர் கிரிக்கெட் போட்டி: தூத்துக்குடி பள்ளி அணி வெற்றி

Published On 2016-11-30 08:32 GMT   |   Update On 2016-11-30 08:32 GMT
தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கமும் ஸ்பிக் நிறுவனமும் இணைந்து நடத்திய பள்ளிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பள்ளி அணி வெற்றி பெற்றது.

முள்ளக்காடு:

தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கமும் ஸ்பிக் நிறுவனமும் இணைந்து நடத்திய பள்ளிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ஸ்பிக் நகர் மற்றும் கனநீர் ஆலை நகர் விளையாட்டு மைதானங்களில் கடந்த 14-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை நடந்தது. இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 26 பள்ளிகள் கலந்து கொண்டன.

போட்டியின் இறுதி நாளில் 3-வது மற்றும் 4-வது இடத்திற்கான போட்டியில் முதலில் ஆடிய உமரிக்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து ஆடிய காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்து 3-வது இடத்தையும், 4-வது இடத்தை உமரிக்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளி அணியும் பிடித்தது.

மதியம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய தூத்துக்குடி விகாசா பள்ளி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து ஆடிய ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் மட்டும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெர்மல் பவர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரிநீலகண்ட பிள்ளை கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு சுழற்கோப்பையும், கேடயமும் மற்றும் தனிப்பரிசுகளையும் வழங்கினார்.

முதலிடத்தை பிடித்த விகாசாபள்ளி அணிக்கு ரொக்கப்பரிசாக ரூ.10 ஆயிரமும், கேடயமும் மற்றும் சுழற்கோப்பையும், 2-ம் இடம் பிடித்த ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளி அணிக்கு ரூ.5000, கேடயமும், சுழற்கோப்பையும், 3-ம் இடம் பிடித்த காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளி அணிக்கு ரூ.2000, கேடயமும், 4-ம் இடம் பிடித்த உமரிக்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளி அணிக்கு ரூ.1000மும், கேடயமும் பரிசாக வழங்கப்பட்டது.

போட்டியின் சிறந்த ஆல்ரவுண்டராக காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளியின் இஸ்மாயில், சிறந்த பேட்ஸ்மேனாக விகாசா பள்ளியின் விஐய், சிறந்த பந்து வீச்சாளராக விகாசாபள்ளியின் நிதி, சிறந்த இளம் வீரராக உமரிக்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளியின் மதிசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு விழாவில் ஸ்பிக் நிறுவனத்தின் முழுநேர இயக்குநர் ராமகிருஷ்ணன், ஸ்பிக் ஆலையின் தலைவர் பாலு, துணை பொது மேலாளர் செந்தில் நாயகம் மற்றும் தெர்மல் பவர் நிறுவனத்தின் மனிதவள துணை பொது மேலாளர் பெருமாள் சாமி, மனிதவள கூடுதல் உயர் அதிகாரி பாண்டியன் மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் உதவி தலைவர் பால்ராைஐயா, மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் மணிவண்ணன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Similar News