செய்திகள்

தமிழகத்திற்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: உத்தரபிரதேச அணி சிறப்பான தொடக்கம்

Published On 2016-10-21 03:35 GMT   |   Update On 2016-10-21 03:35 GMT
தமிழகத்திற்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் உத்தரபிரதேச அணி சிறப்பான தொடக்கத்தை தொடங்கியுள்ளது.
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு - உத்தரபிரதேச அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) தர்மசாலாவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த உத்தரபிரதேச அணி நிதானமாக விளையாடி நல்ல தொடக்கம் கண்டது. ஆட்ட நேர இறுதியில் அந்த அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 207 ரன்கள் சேர்த்துள்ளது. ஸ்ரீவஸ்தவா 53 ரன்களும், சமர்த் சிங் 115 ரன்களும் (நாட்-அவுட்), உமாங் ஷர்மா 36 ரன்களும் (நாட்-அவுட்) எடுத்தனர்.

கொல்கத்தாவில் தொடங்கிய கர்நாடகாவுக்கு எதிரான ஆட்டத்தில் (பி பிரிவு) டெல்லி அணி முதல் இன்னிங்சில் 90 ரன்களில் சுருண்டது. கேப்டன் கவுதம் கம்பீர் 2 ரன்னும், சிக்குன் குனியா காய்ச்சலில் இருந்து குணமடைந்து திரும்பிய இஷாந்த் ஷர்மா 5 ரன்னும், முந்தைய ஆட்டத்தில் முச்சதம் விளாசிய ரிஷாப் பான்ட் 24 ரன்களும் எடுத்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய கர்நாடக அணி 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

Similar News