செய்திகள்

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடகள ஆணைக்குழு உறுப்பினராக சாய்னா நேவால் நியமனம்

Published On 2016-10-18 09:45 GMT   |   Update On 2016-10-18 09:45 GMT
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) தடகள ஆணைக்குழு உறுப்பினராக இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐதராபாத்:

பேட்மிண்டன் போட்டிகளில் பல்வேறு வெற்றிகளைக் குவித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் சாய்னா நேவால். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றார். சமீபத்தில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற அவர், முழங்கால் காயம் காரணமாக லீக் சுற்றிலேயே வெளியேறினார். தற்போது அறுவை சிகிச்சைக்குப் பின் காயம் குணமடைந்து விரைவில் பயிற்சிக்கு திரும்ப உள்ளார்.

இந்நிலையில், சாய்னாவை கவுரவிக்கும் வகையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) தடகள ஆணைக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவருக்கு ஐஓசி தலைவர் தாமஸ் பாச்சிடம் இருந்து அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், ‘ரியோ ஒலிம்பிக் போட்டியின்போது நடைபெற்ற ஐஓசி தடகள ஆணைக்குழு தேர்தலில், தங்களது வேட்பு மனுவை பரிசீலித்து தங்களை உறுப்பினராக நியமித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏஞ்சலா ருக்கரியோ தலைமையிலான தடகள ஆணைக்குழுவில் 9 துணைத்தலைவர்கள், 10 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தடகள ஆணைக்குழுவின் அடுத்த கூட்டம் நவம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ளது.

ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக சாய்னா நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது தந்தை ஹர்வீர் சிங் தெரிவித்தார்.

Similar News