செய்திகள்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆனது

Published On 2016-10-13 05:30 GMT   |   Update On 2016-10-13 05:30 GMT
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 5-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால், 5 போட்டி கொண்ட தொடரில் ஒயிட்வாஷ் ஆனது.
கேப்டவுன்:

தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் பகல்-இரவாக நேற்று நடந்தது.

‘டாஸ்’ வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 327 ரன் குவித்தது.

ரூசோ அபாரமாக விளையாடி தனது 4-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 118 பந்தில் 122 ரன்னும் (14 பவுண்டரி, 2 சிக்சர்), டுமினி 75 பந்தில் 73 ரன்னும் (8 பவுண்டரி), மில்லர் 29 பந்தில் 39 ரன்னும் எடுத்தனர். ஜோ மென்னி, கிறிஸ் டெரி மெய்ன் தலா 3 விக்கெட்டும் போலண்டு 2 விக்கெட்டும் எடுத்தனர்.

328 ரன் இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் இருந்த தொடக்க வீரர் வார்னர் அதிரடியாக விளையாடினார். அவர் 88 பந்துகளில் 16 பவுண்டரியுடன் சதத்தை தொட்டார். 85-வது போட்டியில் விளையாடிய அவருக்கு இது 9-வது சதமாகும்.

வார்னர் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதால் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 9-வது விக்கெட்டாக அவர் ஆட்டம் இழந்தார். 136 பந்துகளில் 173 ரன்கள் குவித்து வெளியேறினார். இதில் 24 பவுண்டரிகள் அடங்கும்.

ஆஸ்திரேலிய அணி 48-2 ஓவர்களில் 296 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் 173 ரன் குவித்தும் எந்த பலனும் இல்லாமல் போனது. தனி ஒருவராக களம் நின்று கடைசி வரை போராடினார். ஆனால் இது பலன் அளிக்கவில்லை. அபோட், ரபடா, இம்ரான் தாகீர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்.

ஆஸ்திரேலியா 5 போட்டியிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது மிகுந்த ஏமாற்றமே. 5 போட்டி கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 142 ரன் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், 4-வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

தென் ஆப்பிரிக்கா பயணம் ஆஸ்திரேலியாவுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது.

Similar News