செய்திகள்

வடக்கு மாகாணங்களில் இரண்டு கிரிக்கெட் மைதானங்களை அமைக்கிறது இலங்கை

Published On 2016-09-06 13:19 GMT   |   Update On 2016-09-06 13:19 GMT
இலங்கை கிரிக்கெட் வாரியம் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் வடக்கு மாகாணத்தில் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு கிரிக்கெட் மைதானங்களை கட்ட இருக்கிறது.
இலங்கை கிரிக்கெட் வாரியம் தமிழர்கள் அதிக அளவில் வாழும் வடக்கு மற்றம் வடமேற்கு மாகாணங்களில் கிரிக்கெட்டை வளர்க்க திட்டமிட்டுள்ளது. இதனால் அந்த இரண்டு மாகாணங்களிலும் தலா ஒரு கிரிக்கெட் மைதானங்கள் கட்ட திட்டமிட்டுள்ளது.

இதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அந்த கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் மோகன் டி சில்வா கூறுகையில் ‘‘பொலன்னறுவை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இரண்டு இடங்களில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க தலா ரூ. 10 கோடி ரூபாய் (இலங்கை மதிப்பில்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வேலை விரைவில் தொடங்கப்படும்.

போலோன்னாருவா ஸ்டேடியம் அமையும் இடம் இறுதி செய்யப்பட்டுவிட்டது. அதன் வேலை விரைவில் தொடங்கும். ஸ்டேடியத்துடன் பெரிய ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் சேர்த்தும் கட்டப்படும். ஜாப்னாவில் மைதானத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. மக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் மெயின் ரோடு அருகில் இடம் தேடப்பட்டு வருகிறது.

தமிழ் மக்களுக்காக வடக்கு மாகாணத்தில் மைதானம் அமைக்கப்படுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. யாழ்ப்பாணம் மாவட்ட கிரிக்கெட் அசோஷியேசன் இதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

நாங்கள் முதல் தர கிரிக்கெட் விளையாடுவதற்கான வகையில்தான் இந்த இரண்டையம் கட்ட இருக்கிறோம். பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் வகையில் தரம் உயர்த்தப்படும். வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கிரிக்கெட்டை மேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம்’’ என்றார்.

Similar News