செய்திகள்

முதல் 7 இடங்களுக்குள் இறங்கி நீண்ட நேரம் பேட்டிங் செய்ய ஆசை: அஸ்வின் சொல்கிறார்

Published On 2016-07-23 14:14 GMT   |   Update On 2016-07-23 14:14 GMT
ஆன்டிகுவா டெஸ்டில் 6-வது வீரராக களம் இறங்கிய அஸ்வின் 253 பந்துகளை சந்தித்து 113 ரன்கள் விளாசினார். இதனால் முதல் 7 இடத்திற்குள் களமிறங்க விரும்புகிறார்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 566 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஐந்து பேட்ஸ்மேன்களுடன் விளையாடிய இந்தியா கோலியின் இரட்டை சதம் மற்றும் அஸ்வினின் சதத்தால் இந்த ரன்னை எட்டியது.

சதம் அடித்தது குறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘நான் இந்திய அணியில் எப்போதுமே முதல் 7 இடத்திற்குள் களம் இறங்கி விளையாட ஆசைப்படுவேன். இதுதான் என்னுடைய நீண்ட கால கனவு. அதற்காக நான் அதிகப்படியான முயற்சிகளை செய்ய வேண்டும்.

என்மீது நம்பிக்கை வைத்து 6-வது வீரராக களம் இறக்கிய அனில் கும்ப்ளே மற்றும் விராட் கோலிக்கு நன்றி சொல்லவேண்டும். கடந்த காலத்தில் இதுபோன்று நான் செயல்பட்டபோதிலும், உண்மையான பதவி உயர்வை பெறமுடியவில்லை. தற்போது என்னைப் பற்றி பேச ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

கேப்டன் விராட் கோலி காலையில் என்னிடம் வந்து நீங்கள் சஹாவிற்கு முன் 6-வது நபராக களம் இறங்க வேண்டும் என்று கூறினார். இது என்னுடைய பேட்டிங் திறமைக்கு மேலும் ஊட்டச்சத்து கொடுப்பதுபோல் இருந்தது. கடந்த ஒரு மாதமாக சென்னையில் என்னுடைய பயிற்சியாளரிடம் தீவிர பயிற்சி மேற்கொண்டேன். அந்த வகையில் சிறந்த ஆட்டம் தற்போது வெளிப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி’’ என்றார்.

Similar News