செய்திகள்

ரஷியாவை சுழற்றி அடிக்கும் ஊக்கமருந்து விவகாரம்: உயரம் தாண்டுதல் வீராங்கனையும் சிக்கினார்

Published On 2016-05-26 14:58 GMT   |   Update On 2016-05-26 14:58 GMT
ரஷியாவைச் சேர்ந்த உயரம் தாண்டுதல் வீராங்கனை ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியுள்ளார். இவருடன் மொத்தம் 14 பேர் ஆவார்கள்
உலக ஒலிம்பிக் குழு தடகள போட்டியில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். எந்தவொரு கட்டத்திலும் தவறான நபர்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.

2008-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் ஏராளமான தடகள வீரர்கள்- வீராங்கனைகள் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனால் 2008-ல் வீரர்களிடம் எடுத்த பரிசோதனைகளில் 454-ஐ மாதிரியாக எடுத்து தற்போது மீண்டும் பல கட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டது.  இதில் 31 பேர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டது.

ஏற்கனவே 30 பேர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. தற்போது ரஷியாவின் உயரம் தாண்டுதல் வீராங்கனையும் சிக்கியுள்ளார்.

2008-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ரஷியா சார்பில் அன்னா சிசெரோவா கலந்து கொண்டார். இதில் இவர் வெண்கல பதக்கம் வென்றார். அதன்பின் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றார்.

பரிசோதனையில் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது குறித்து அன்னா கூறுகையில் ‘‘இது முற்றிலும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது. இது எப்படி நடந்தது என்று என்னால் விளக்க முடியவில்லை. நான் ஏற்கனவே என்ன மருந்து எடுத்துக்கொண்டேன் என்பதை உறுதியாக கூறிவிட்டேன்’’ என்றார்.

ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கியதால் இவருடைய பதக்கம் பறிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒலிம்பிக் குழு இதுவரை 31 பேர் ஊக்கமருந்து பயன்படுத்தியதை உறுதிப்படுத்தியுள்ளது. இதில் 14 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

ரியோ ஒலிம்பிக்கில் ரஷ்யா அதிக அளவில் பதக்கம் வெல்லக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட சதி என்று ரஷிய தொலைக்காட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News