இந்தியா

ஓய்வூதியம் கிடைக்காததால் 2 கி.மீ. ஊர்ந்து வந்த மாற்றுத்திறனாளி மூதாட்டி

Published On 2024-01-11 05:04 GMT   |   Update On 2024-01-11 05:37 GMT
  • மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியமாக பெற்று வந்தேன். ஆனால் கடந்த 2 மாதங்களாக அது எனக்கு வரவில்லை.
  • பஸ், ஆட்டோ ரிக்ஷாவில் செல்ல பணம் இல்லாததால் 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்ந்து செல்ல முடிவு செய்தேன் என்று கண்ணீருடன் கூறினார்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் தாவனகரே ஹரிஹார் தாலுக்காவை சேர்ந்தவர் கிரிஜாம்மா (77). இவர் பிறவியிலேயே உடல் ஊனமுற்றவர். இவர் தபால் அலுவலகம் மூலம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் மாதம் தோறும் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் திடீரென கிரிஜம்மாவுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குனிபெலேகெரே கிராமத்தில் உள்ள தபால் அலுவலகத்திற்கு கிரிஜம்மா கால்கள் செயல்படாத நிலையில் 2 கைகள் மூலம் ஊர்ந்து வந்தார்.

அங்கிருந்த அதிகாரிகளிடம் ஓய்வூதியம் வரவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் அவர்கள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்ந்து வந்ததால் அவரின் கால்களில் கொப்பளங்கள் இருந்தது.

இது குறித்து கிரிஜம்மா கூறும்போது:- மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியமாக பெற்று வந்தேன். ஆனால் கடந்த 2 மாதங்களாக அது எனக்கு வரவில்லை. பஸ், ஆட்டோ ரிக்ஷாவில் செல்ல பணம் இல்லாததால் 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்ந்து செல்ல முடிவு செய்தேன் என்று கண்ணீருடன் கூறினார்.

இதையடுத்து குனேபெலேகெரேவை சேர்ந்த ஒரு ஆஷா பணியாளர் அவரது நிலையை உள்ளூர் தாசில்தாரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். பின்னர் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் கிரிஜம்மாவை சிகிச்சைக்காக ஹரிஹர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இது கர்நாடக மாநிலம் முழுவதும் வைரலாக பரவியது.

Tags:    

Similar News