இந்தியா

ஒரே குடும்பத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளான 4 சகோதர-சகோதரிகள்

Published On 2022-07-31 11:59 GMT   |   Update On 2022-07-31 11:59 GMT
  • ஒரு குடும்பத்தில் ஒருவர் அல்லது 2 பேர் அல்லது கணவன்- மனைவி இந்தியாவில் உயர்ந்த பதவியான ஐ.ஏ.எஸ், அல்லது ஐ.பி.எஸ் ஆக இருக்கலாம்.
  • நான் பெற்ற குழந்தைகள் என்னை தலை நிமிர செய்து உள்ளனர் என்று ஆனந்த கண்ணீருடன் தெரிவித்தனர்.

ஒரு குடும்பத்தில் ஒருவர் அல்லது 2 பேர் அல்லது கணவன்- மனைவி இந்தியாவில் உயர்ந்த பதவியான ஐ.ஏ.எஸ், அல்லது ஐ.பி.எஸ் ஆக இருக்கலாம். ஆனால் 4 சகோதர- சகோதரிகள் இந்த பதவியை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கார் பகுதியை சேர்ந்தவர் அனில் பிரசாத் மிஸ்ரா. கிராம வங்கி மேலாளரான இவருக்கு யோகேஷ் மிஸ்ரா லோகேஷ் மிஸ்ரா ஆகிய 2 மகன்களும், ஷாமா மிஸ்ரா, மாதுரி மிஸ்ரா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரையும் தந்தை அனில் பிரசாத் கஷ்டப்பட்டு ஒரு லட்சியத்துடன் படிக்க வைத்தார்.

அதற்கு அவருக்கு பலன் கிடைத்தது. தற்போது அவர் பெற்ற செல்வங்கள் அனைவரும் ஐ.எ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளாக உள்ளனர். அவர்கள் அவருக்கு மட்டும் அல்ல இந்தியாவிற்கே பெருமை பெற்று தந்துள்ளனர்.

மூத்த மகன் யோகேஷ் மிஸ்ரா என்ஜினீயரிங் படித்தார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த யு.பி.எஸ்.சி தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ் ஆனார்.

இவரது தங்கை ஷாமா மிஸ்ரா தொடர்ந்து 3 முறை தேர்வு எழுதி தோல்வியை தழுவினார். இருந்த போதிலும் தனது விடா முயற்சியால் 4-வது முறையாக எழுதிய தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ் அதிகாரி ஆனார்.

மற்றொரு தங்கையான மாதுரி மிஸ்ரா முதுகலை பட்டம் பெற்றவர். இவர் 2014-ம் ஆண்டு நடந்த யு.பி.எஸ்.சி. தேர்வில் பங்கேற்று வெற்றி வாகை சூடினார். தற்போது இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

அடுத்த ஆண்டு நடந்த தேர்வில் அனில் பிரசாத் மிஸ்ராவின் கடைசி மகனான லோகேஷ் மிஸ்ரா தேர்ச்சி அடைந்ததுடன் தேசிய அளவில் 44-வது இடத்தையும் பிடித்தார்.

இவர் இப்போது பீகார் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருக்கிறார். இப்படி அனைவருமே ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் அரசு பணியில் சேர்ந்து அவரது பெற்றோரை பெருமை பட வைத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்களது பெற்றோர் கூறும் போது இதற்கு மேல் எங்களுக்கு என்ன வேண்டும். நான் பெற்ற குழந்தைகள் என்னை தலை நிமிர செய்து உள்ளனர் என்று ஆனந்த கண்ணீருடன் தெரிவித்தனர்.

Similar News