இந்தியா
வானிலை நிலவரம்

அசானி புயல் மியான்மர் நோக்கி செல்லும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2022-03-20 16:43 GMT   |   Update On 2022-03-20 16:43 GMT
வங்கக் கடலில் நாளை உருவாக உள்ள அசானி புயல் அந்தமான் நிகோபார் தீவுகளில் கரைகடக்காது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வடக்கு திசையில் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு அசானி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அசானி புயல் அந்தமான் தீவுகளில் இருந்து மியான்மர் மற்றும் தெற்கு வங்காளதேச கடற்கரையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குனர் மிருத்யுஞ்சய் மொகபத்ரா தெரிவித்துள்ளார். அந்தமான் தீவுகளில் புயல் கரை கடக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட சிறப்பு தகவலின் படி, தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடகிழக்கு நோக்கி 12 கிமீ வேகத்தில் நகர்ந்து இன்று மாலை 5.30 மணியளவில் வடக்கு அந்தமான் கடலில் மையம் கொண்டிருந்தது. 

இது அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளை ஒட்டி வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கு அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
Tags:    

Similar News