இந்தியா
2 பேர் எரித்துக் கொலை

ஆந்திராவில் நிலத்தகராறில் ஆசிட் வீசி 2 பேர் எரித்துக் கொலை

Published On 2022-01-28 07:10 GMT   |   Update On 2022-01-28 07:10 GMT
நிலத்தகராறு சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் ஆசிட் வீசி 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் மந்த்ராலயம் அருகே உள்ள காமவரம் கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுனா. விவசாயி. அதே பகுதியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவரின் தம்பி சிவப்பா. மல்லிகார்ஜுனாவுக்கு 7 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதன் அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மல்லிகார்ஜுனா விவசாயம் செய்து வந்தார்.

இந்த நிலையில் பஞ்சாயத்து தலைவராக தனது அண்ணன் இருப்பதால் அரசு புறம்போக்கு இடத்தை தன்னிடம் கொடுக்க வேண்டுமென சிவப்பா மல்லிகாஜுனாவிடம் தகராறு செய்து வந்தார்.

இது சம்பந்தமாக ஊர் பஞ்சாயத்தார் மூலம் தீர்வு காண கூட்டம் கூட்டினார். அதிலும் தீர்வு கிடைக்காமல் கூட்டம் பாதியிலேயே நிறைவடைந்தது.

இதையடுத்து சிவப்பா நேற்று தனது உறவினர்கள் மற்றும் அடியாட்கள் 30 பேருடன் கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் மல்லிகார்ஜுனா வீட்டிற்கு சென்றார்.

இது குறித்து முன்கூட்டியே தகவலறிந்த நாகார்ஜுனா விவசாய நிலத்திற்கு பூச்சி கொல்லி மருந்து தெளிக்கும் எந்திரத்தில் ஆசிட்டை நிரப்பினார். தனது உறவினர்களான ராஜி, ராமாஞ்சி, ஈஸ்வர், கோபால் மற்றும் அவரது மனைவியுடன் மாடியில் தயாராக நின்று கொண்டு இருந்தார்.

அப்போது சிவப்பா தனது அடியாட்களுடன் நாகார்ஜுனா வீட்டிற்கு முன்பாக வந்தார். இதனை கண்ட நாகார்ஜுனா ஆசிட் நிரப்பி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் எந்திரம் மூலம் சிவப்பா ஆட்கள் மீது ஆசிட்டை பீய்ச்சி அடித்தார்.

உடல் முழுவதும் ஆசிட்பட்டதால் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்தநிலையில் ஆசிட் உடலில் பட்டதால் சிவப்பா, பாஸ்கர், வீரண்ணா, சத்யப்பா, பஜாரப்பா ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துக் கீழே விழுந்தனர்.

மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த நாகார்ஜுனா மற்றும் அவரது உறவினர்கள் தரையில் விழுந்து கிடந்த சிவப்பா, பாஸ்கர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர்.

இதில் இருவரது உடலும் தீயில் கருகி சாம்பல் ஆனது. இதையடுத்து நாகார்ஜுனா உட்பட அவரது உறவினர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

தலைமறைவாக உள்ள நாகார்ஜுனா உட்பட அவரது உறவினர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News