இந்தியா
கடலில் மூழ்கி மரணம்

செல்பி எடுத்தபோது கடலில் மூழ்கி உயிரிழந்த சுற்றுலாப் பயணி

Published On 2022-01-24 13:09 GMT   |   Update On 2022-01-24 13:09 GMT
கடலில் விழுந்த காலணியை எடுக்க முயன்ற சுற்றுலாப் பயணி ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு இறந்தார்.
டையு:

தாத்ரா- நகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் செல்பி எடுக்கும்போது கடலில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் கிர்-சோம்நாத் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சிலர் தாத்ரா- நகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தின் டையு மாவட்டத்திற்கு நேற்று சுற்றுலா சென்றனர். அப்போது பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள், பிரபல கடற்கரையான நகோவா கடற்கரைக்கு சென்றனர். கடற்கரையை ஒட்டி உள்ள ஒரு பாறை மீது அனைவரும் அமர்ந்து இயற்கையை கண்டுகளித்தபடி புகைப்படம் எடுத்தனர். 

அவர்களில் துர்காபிரசாத் கிரிதி (வயது 38) என்பவர் பாறையின் ஓரத்தில் அமர்ந்தபடி காலை தொடங்கவிட்டுக்கொண்டு செல்பி எடுத்துள்ளார். அப்போது அவரது காலணி கடலுக்குள் விழுந்தது. உடனே கடலில் இறங்கிய அவர் காலணியை எடுக்க முயன்றுள்ளார். அப்போது எழுந்த ராட்சத அலையில் அவர் இழுத்துச் செல்லப்பட்டு இறந்தார். அவரது உடலை மீட்புக்குழுவினர் மீட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News